Advertisment

அரசு நிலம் அபகரிப்பு: கோவை அ.தி.மு.க, பா.ஜ.க பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் மற்றும் பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

author-image
WebDesk
Sep 27, 2023 15:59 IST
New Update
Liquor at sports events in Tamil Nadu

நிலத்தையும், கட்டிடத்தையும் மீட்டு, பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.

Madras-high-court: அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் சிங்காநல்லூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் மற்றும் பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisment

கோவை மாவட்டம், விளாங்குறிச்சி கிராமத்தில் கோவிந்தசாமி என்பவரிடமிருந்த  45 ஏக்கர் 82 சென்ட் நிலத்தை நில சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் உபரி நிலங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில், கோவிந்தசாமியின் மனைவி அளித்த மனுவின் அடிப்படையில் பட்டா வழங்க தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், அதை வருவாய் கோட்டாட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அவரது வாரிசுகளான சிவராஜ், பாலாஜி மற்றும் கிரீன் வேல்யூ ஷெல்டர்ஸ் நிறுவனம் ஆகியோர் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்  நிலத்தை மீட்க உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராமன்லால் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிலம் மீட்கப்பட்டதாகவும், அதன்பின்னர் நேரில் சென்று மீண்டும் ஆய்வு செய்தபோது, அங்கு சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கே.ஆர். ஜெயராம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் பல  கட்டுமானங்களை ஏற்படுத்தி உள்ளது தெரியவந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து நீதிபதி, அரசு நிலத்தில் சட்டவிரோதமாக குடியிருந்தவர்கள், மற்றவர்களின் பெயருக்கு மாற்றி உள்ளதை சுட்டிக்காட்டி, இது அழுத்தத்தின் காரணமாக நடைபெற்றதா அல்லது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டார்களா என விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

நிலத்தில் சட்டவிரோதமாக குடியிருந்தவர்கள், அதன்பின்னர் அவற்றில் கட்டுமானங்களை மேற்கொண்டவர்கள் உள்ளிட்டோர் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், அவர்கள் தப்பிக்க அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார். திட்டமிட்டு நிலத்தை அபகரிப்பது அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட நீதிபதி, பொது ஊழியர் என்கிற பெயரில் அரசு சொத்தை அபகரிப்பதை அனுமதிக்க முடியாது என்றும், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், குற்றச்சாட்டு  நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை பொறுத்தவரை நிலத்தையும், கட்டிடத்தையும் மீட்டு, பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக குடியிருப்போரை நான்கு வாரங்களில் அப்புறப்படுத்தி, அதுகுறித்த அறிக்கையை நவம்பர் 4ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

#Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment