மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி தொடர்பான வழக்கில் அவருடைய வாரிசுகளான ஜெ. தீபா மற்றும் ஜெ. தீபக்கை சேர்க்க வருமானவரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா 2008, 2009ம் ஆண்டுகான செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, செல்வ வரி சட்டம் 35வது பிரிவில் அவர் மீது வருமானவரித் துறையினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்து வருமானவரித் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து வருமானவரித் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதாவை செல்வ வரி வழக்கில் இருந்து விடுவித்ததை எதிர்த்து வருமானவரித் துறை தாக்கல் செய்த மனு இன்று (டிசம்பர் 06) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதால் அவருடைய வாரிசுகளான அவருடைய அண்ணன் மகள் ஜெ. தீபா, அண்ணன் மகன் ஜெ. தீபக்கை ஆகியோரை வழக்கில் சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் வருமானவரித் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தது.
முன்னதாக , போயஸ் கார்டனில் உள்ள மறைந்த ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தை நினைவிடமாக்க அதிமுக அரசு நிலம் கையகப்படுத்தும் அரசின் நடைமுறைகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்கள் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசுகள் என்று அறிவித்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"