Madras-high-court | bjp Lotus Symbol: தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி என்றும், நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது எனக் கூறி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான டி.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், பா.ஜ.க-வுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக்கோரி கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்து இருந்தார். இதனால், தனது மனுவை பரிசீலித்து, பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தாமரை சின்னத்தை பா.ஜ.வுக்கு ஒதுக்க எந்த சட்டப்பிரிவு தடை செய்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து, தாமரை சின்னம் ஒதுக்கீட்டில் விதிமீறல் உள்ளது குறித்து விளக்கமளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்று விசாரணையை டிசம்பர் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இது விளம்பர நோக்குடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்றும், சின்னம் ஒதுக்கீட்டில் விதிமீறலை நிரூபிக்கா விட்டால் கடுமையான அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என நீதிபதிகள், எச்சரிக்கை விடுத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“