தேனி மாவட்டம் பூதிப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. பழனிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த அஜீத் அரபுக்கனி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், பழனிசெட்டிப்பட்டி- பூதிப்புரம் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளால் விபத்துகளும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
மேலும் அங்கு 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது. சட்டவிரோதமாக மதுவை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதுதொடர்பாக பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் எனது வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்துச் சென்றனர்.
எனவே, பழனிசெட்டிப்பட்டி - பூதிபுரம் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடையை மூடவும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் முத்துகணபதி, கார்த்திக் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு, பழனிசெட்டிப்பட்டி - பூதிப்புரம் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்களை கைது செய்ய வேண்டும். டாஸ்மாக் கடை பிரச்சனையில் இதுவரை 17 வழக்குகள் பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது என்றும் நீதிபதி தெரிவித்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து, தேனி மாவட்ட ஆட்சியர், மாவட்ட டாஸ்மாக் மேலாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 28-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“