மும்பை வங்கியில் கேட்பாறற்று கிடந்த 40 கோடியை கையாடல் செய்ய முயன்ற வழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 6 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிணை (ஜாமின்) மறுத்துவிட்டது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு மும்பை கோட்டை பகுதியில் கிளை ஒன்று செயல்பட்டுவருகிறது.
இந்தக் கிளையில் ஹமீதா ஏ லால் ஜி என்பவர் தனது சேமிப்புக் கணக்கில் ரூ.40 கோடி டெபாசிட் செய்துவைத்துள்ளார். இந்த நபரின் மரணத்துக்கு பிறகு கணக்கு செயல்படாமல் இருந்துள்ளது.
இது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உமா காந்தன் என்பவருக்கு தெரியவந்துள்ளது. உமா காந்தன், ஐரோப்பாவில் வசித்துவருகிறார்.
இதையடுத்து பணத்தை எப்படியாவது எடுத்து விடுதலை புலிகள் கணக்கில் சேர்த்துவிட வேண்டும் என நினைத்து திட்டம் தீட்டியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி தமிழரான லட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்கா என்பவர் இந்தியா வந்தார்.
இவர் இங்கு இந்தியர் போல் பான், ஆதார் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவையை பெற்றுள்ளார். தொடர்ந்து, தர்மேந்திரன், பாஸ்கரன், மோகன், ஜான்சன் சாமுவேல் மற்றும் கென்னிஸ்டன் ஃபெர்னான்டோ ஆகியோர் லட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்காவுடன் கூட்டுச் சேர்ந்து, ஹமீதா ஏ லால் ஜி கணக்கை நிர்வகிக்க பொது அதிகாரம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், வங்கியின் பணத்தை எடுக்க முயற்சித்த நிலையில் மேற்கூறிய 6 பேரும் போலீசாரிடம் சிக்கினர். தொடர்ந்து இவர்கள் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்பு முகமை வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
முதலில் இந்த வழக்கு செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. தொடர்ந்து வழக்கு பூந்தமல்லி என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் தங்களுக்கு பிணை வழங்கக் கோரி கென்னிஸ்டன் ஃபெர்னான்டோ, பாஸ்கரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்., பிரகாஷ், டீக்காராமன் அமர்வு பிணை வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“