LGBTQIA+ woman facing harassment from family : மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து வாழும் 24 வயது, பாலியல் சிறுபான்மையின பெண்ணை (LGBTQIA+ community) தொந்தரவு செய்யக் கூடாது என்றும் அந்த பெண்ணுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பினையும் காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதி நிர்மல்குமார் இது தொடர்பாக ஏற்கனவே சமீபத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மனுதாரர் தன்னுடைய மனுவில் 12ம் வகுப்பு படித்து முடித்தவுடனே, 17 வயதில் வீட்டார் கட்டாயத்தின் பெயரில் திருமணம் செய்து கொண்டார் என்றும் மேற்படிப்பு படிக்க அனுமதி மறுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
ஆண்டுகள் ஓட, தன்னுடைய பாலின தேர்வு தன்பாலின ஈர்ப்பாக இருப்பதை உணர்ந்து கொண்டுள்ளார். மேலும் இந்த திருமண உறவில் தொடர்ந்து நீடிக்க அவருக்கு விருப்பம் இல்லை என்பதையும் உணர்ந்து கொண்ட நிலையில் அவருடைய திருமண வாழ்வு மேற்கொண்டு முன்னேற்றத்தை காணவில்லை.
தன்னுடைய பாலியல் தேர்வு குறித்தும் விருப்பம் குறித்தும் வீட்டில் தெரிவித்த அவர், இந்த திருமண பந்தத்தில் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை என்றும் கூறினார். வீட்டினரின் ஆதரவுக்கு பதிலாக வீட்டினரின் பல்வேறு வசை மற்றும் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளார் அந்த பெண். இது போன்ற பெண் இல்லாமலே இருந்திருக்கலாம் என்றும் அவரின் பெற்றோர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தன்னுடைய பெண் துணையுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் அவர்.
தன்னுடைய மகளை காணவில்லை என்று குடும்ப உறுப்பினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி அப்பெண்ணை காவல்துறையினர் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ஆணைகள் பிறப்பித்துள்ளார்.
பாலியல் தேர்வு என்பது தனியுரிமைக்கான இன்றியமையாத அம்சமாகும் என்பதை அடிகோடிட்டு காட்டிய சென்னை உயர் நீதிமன்றம், பாலியல் சிறுபான்மையின மக்களின் பிரச்சனைகளை பிரதானமாக கொண்டுவர முக்கிய வழிகாட்டுதல்களை ஜூன் 7ம் தேதி வெளியிட்டது சென்னை உயர் நீதிமன்றம். ஆண் அல்லது பெண் காணவில்லை என்று புகார்கள் வருகின்ற போது, சம்பந்தப்பட்ட நபர்கள் பாலின சிறுபான்மையினராக இருக்கின்ற பட்சத்தில் (LGBTQIA+ (lesbian, gay, bisexual, transgender, queer, intersex, asexual and such others) அவர்களிடம் எழுத்துப்பூர்வ அறிக்கைகளை பெற்று வழக்கை முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.