திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தல் வழக்கு:
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து காலியாக உள்ள திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வரும் 28 ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கான தேர்தல் பிரச்சாரம் , வேட்பாளர்கள் தேர்வு ஆகிய பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவாரூரில் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பிரசாத் என்பவர் தொடர்ந்த இந்த மேல்முறையீட்டு மனுவில் ,கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் இன்னும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால், இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்றும் பொங்கல் பண்டிகையும் வருகிறது என்பதால் இந்த சூழ்நிலையில் தேர்தலை நடத்தக்கூடாது என்று கோரிக்கை வைக்கப்படிருந்தது.
முறையீட்டு மனுவை அவரச வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் முதலில் மறுப்பு தெரிவித்திருந்தது . பின்பு மனுவாக தாக்கல் செய்தால், விசாரிப்பதாக நேற்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விசாரணைக்கு பின்பு இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
திருவாரூர் தொகுதியின் வேட்பாளர் யார்? மு.க ஸ்டாலினின் சுடச்சுட பதில்!
அதோடு இடைத்தேர்தலை தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.