மதுபான அனுமதி தொடர்பான விதிகளில் தமிழக அரசு அண்மையில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டிருந்தது. அதில் திருமண மண்டபங்கள், விழா மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற ஏதுவாக சிறப்பு உரிமம் பெறுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதாவது இந்த இடங்களில் மதுபானம் பரிமாற சிறப்பு உரிமம் பெற்று பரிமாறலாம் என அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விழாக்கள், திருமண நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற வகை செய்யும் சிறப்பு உரிமம் அரசாணையில் இருந்து நீக்கப்படுவதாக அரசு அறிவித்தது.
இந்நிலையில், அரசின் மதுபான அனுமதி திருத்த விதிகளை எதிர்த்து, சமூக நீதி பேரவை தலைவர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று(ஏப்ரல் 26) விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், "விழாக்கள், திருமண நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற வகை செய்யும் சிறப்பு உரிமம் அரசாணையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும், புதிய அரசாணையை எதிர்த்து தான் வழக்கு செய்யப்பட வேண்டும்" என்று கூறினார்.
தொடர்ந்து மனுதாரர் தரப்பில், "மனுவில் பொது இடங்கள் மட்டுமல்லாது வணிக ரீதியிலான சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகள் போன்றவற்றிலும் மதுபானங்கள் பரிமாற தடை விதிக்க கோரப்பட்டுள்ளது" என்றார். மேலும், புதிய ஆணையை எதிர்த்து புதிய மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த விதிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஜுன் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“