ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி, அவரது கணவருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 5 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
1991-96 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திர குமாரி, மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடு செய்ததாக அவரது கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அந்த காலகட்டத்தில், இந்திர குமாரி கணவர் பாபு நிர்வாக அறங்காவலராக இருந்த அறக்கட்டளைக்கு மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான பள்ளி தொடங்க சமூக நலத்துறை சார்பில் 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிதியின் மூலம் குழந்தைகளுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என்று சமூக நலத்துறையின் அப்போதைய செயலாளர் லட்சுமி பிரானேஷ் அளித்த புகாரின் பேரில், இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு, கிருபாகரன் (இறந்து விட்டார்), சண்முகம், வெங்கட கிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்த்தில் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபுவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், மாற்றுதிறனாளி மறுவாழ்வுத் துறையின் முன்னாள் செயலர் சண்முகத்திற்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் விதித்து 2021ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
குற்றம் சாட்டப்பட்ட கிருபாகரன் இறந்து விட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட சிறப்பு நீதிமன்றம், வெங்கடகிருஷ்ணன் என்பவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திர குமாரி உள்பட மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த மனு நிலுவையில் இருந்த போது, கடந்த ஏப்ரல் மாதம் இந்திர குமாரி காலமானார்.
இந்நிலையில் இந்த மேல் முறையீட்டு மனு இன்று(செப்.5) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி இறந்துவிட்டதால் அவரை மட்டும் விடுவித்தும் மற்ற அனைவருக்கும் விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“