பொதுப் பிரச்சினைகளில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததற்காக தனிநபர்கள் மீது வழக்குகளைத் தொடுப்பது பாசிச அணுகுமுறையைக் குறிக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது போன்ற போக்கு கவலை அளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஜனநாயகம் என்பது கருத்துகளை தெரிவிப்பது. கருத்துகளின் சந்தையில் சரியான பொருள் கொண்டவை மட்டுமே நிலைத்து நிற்கும். ஒரு கருத்து தவறாக இருந்தால், அது நீணட நாட்களுக்கு நிலைத்து நிற்க முடியாது" என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
யூடியுபர் சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கில் இத்தகைய கருத்துகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். நில மோசடி வழக்குகள் தொடர்பாக தவறான தகவல்களை சவுக்கு சங்கர் பரப்புவதாகக் கூறி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் இருந்து தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என சவுக்கு சங்கர் கோரிய மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்தார்.
"சவுக்கு சங்கர் எப்படி காவலில் எடுக்கப்பட்டார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதை விட அவருக்கு ஜாமின் வழங்க கீழமை நீதிமன்றம் மறுத்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. மனுதாரர் தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரவில்லை. அவர் ஜாமின் மட்டுமே கோரியுள்ளார்" என நீதிபதி கூறினார்.
சவுக்கு சங்கர் மீது அடுக்கடுக்காக வழக்குகள் பதிவு செய்யப்படுவதற்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், உச்சநீதிமன்றம் அவரைக் காப்பாற்ற முயன்ற போது அடுத்தடுத்து வழக்குகள் போட்டு நீதிமன்ற உத்தரவுகளை அரசு புறக்கணித்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
"சிறிய காரணத்துக்காக மனுதாரர் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. காவல்துறையின் கெடுபிடிகள் எல்லா இடங்களிலும் தெரிகிறது. பிரதிவாதியை (காவல் ஆய்வாளர், நில மோசடி விசாரணை பிரிவு II, சிசிபி) நான் கண்டிக்கிறேன்" என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட் XI-ல் மனுதாரர், ரூ. 10,000 செலுத்த வேண்டும் என ஜாமின் வழங்கியதை தொடர்ந்து நீதிபதி உத்தரவிட்டார். "மனுதாரருக்கு எதிராக எந்த நிபந்தனையும் விதிக்க நான் மறுக்கிறேன். மனுதாரர் மீதான கிரிமினல் வழக்கு பராமரிக்க முடியாதது" என அவர் தெரிவித்துள்ளார்.
யூடியுப் சேனலுக்கு மனுதாரர் அளித்த நேர்காணல், நில மோசடி வழக்கை விசாரணை செய்வதிலிருந்து போலீசாரை எப்படித் தடுத்துள்ளது என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.