சாலையில் வைக்கப்பட்டுள்ள விதி மீறிய பேனர்களை பார்க்காமல், அரசு அதிகாரிகள் ஹெலிகாப்டரிலா பறந்து செல்கிறார்கள்? என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவையில் ஆர் எஸ் புரத்தில் அண்மையில் ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சிக்காக விதிமுறைகளை மீறி கடந்த ஒரு வாரமாக விதிகள் மீறி பேனர் வைக்கப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாரயணன், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் டிராபிக் ராமசாமி முறையிட்டார்.
முறையீட்டை கேட்ட நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல் குமார் அமர்வு, விதிகளை மீறிய பேனர்களை அகற்ற கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை உயர்நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறபித்துள்ளது. அதை அரசு இதுவரை அமல்படுத்தவில்லை என கண்டனம் தெரிவித்தனர்.
விதி மீறிய பேனர் விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் உத்தரவிட்டால் தான் அரசும், அதிகாரிகளும் செயல்படுத்துவர்களா? என கேள்வி எழுப்பினார்.
விதிகள் மீறி வைக்கப்படும் பேனர்கள் குறித்து வழக்குகள், அது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் தற்போது அதிகரித்து கொண்டே செல்கிறது. என கருத்து தெரிவித்தனர்.
இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என நீதிமன்றம் அரசுக்கு கேள்வி எழுப்பினால், கேட்டு சொல்வதாக தெரிவிப்பதற்கு எதற்கு அரசு வழக்கறிஞர்கள் ஊதியம் பெற வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
விதிமீறல் பேனர்கள் தொடர்பாக வழக்குகளில், தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் கால அவகாசம் வாங்கி கொண்டே இருந்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இருக்கிறது. அந்த நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை தூண்டுகிறது அரசு என நீதிபதிகள் எச்சரித்தனர்.
பேனர் விவகாரத்தில் விதிகளை பின்பற்ற மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் 6 மாதம் தான் தண்டனை என இருந்தாலும், உயர்நீதின்றத்துக்கு அளவற்ற அதிகாரம் உள்ளதாகவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
விதி மீறல் பேனர்களை ஒரு வாரமாக அகற்றவில்லை என்றால் அரசு அதிகாரிகள் சாலையில் செல்கிறார்களா? அல்லது ஹெலிகாப்டர் பறக்கிறார்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், டிஜிட்டல் பேனர் கம்பெனிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியாதா? என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, இது தொடர்பாக டிராபிக் ராமசாமி வழக்கு மனுவாக தாக்கல் செய்ய விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அனுமதி அளித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.