'டாஸ்மாக் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்கலாமா?' - அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்து விட்டது. இனிவரும் தலை முறைகளையாவது காக்க வேண்டும்

வருவாய்க்காக டாஸ்மாக் கடைகளை மட்டும் நம்பாமல் மாற்று வழியில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், “தமிழகத்தில் கடந்த ஆண்டில் 31,244 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் 36 சதவீதமாகவும், தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் 46.7 சதவீதமாகவும் உள்ளது. மது அருந்தும் பழக்கத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

மதுப்பழக்கத்தால் மனமுறிவு, நிம்மதியின்மை, உடல் நலக்குறைவு உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை செயல்படுகின்றன. இரவில் போதையில் வாகனத்தில் செல்வோர்களால் விபத்துகளும், உயிரிழப்புகளும் நடைபெறுகின்றன.

மது விற்பனைக்கு எதிராகவும், மதுகடைகளை மூடவும் வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இருப்பினும் மது விற்பனை அதிகரித்து வருகிறது.

எனவே தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும். மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும்.

மேலும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைப்பட்டியல் வைக்கவும், மது விற்பனைக்கு ரசீது வழங்கவும், கூடுதல் விற்பனைக்கு மது விற்றால் புகார் அளிக்க உயர் அதிகாரிகளின் தொடர்பு எண் மற்றும் விபரங்களை டாஸ்மாக் கடைகளில் எழுதி வைக்கவும், மதுபான பாட்டில்களில் அதில் கலந்துள்ள பொருட்கள் மற்றும் தயாரிப்பாளர் விபரங்களை தமிழில் குறிப்பிடவும், டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மது அருந்துவது தொடர்பான புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டதோடு, மதுக்கடையின் நேரத்தை மாற்ற உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது.

அதற்கு நீதிபதிகள் 24 மணி நேரமும் மது கிடைக்கும் போது, மதுக்கடைகளின் நேரத்தை மாற்றி அமைப்பதால் என்ன பயன் என கேள்வி எழுப்பினர்.

அரசுத்தரப்பில் மது விற்பனையை முறைப்படுத்த பல விதிகளும், அரசாணைகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், விதிகள் உள்ளன. ஆனால் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? பல்வேறு பிரச்சனைகளுக்கும் காரணம் மதுவே. சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தினால் பெரும்பாலான குற்றங்கள் குறையும்.

வருவாய்க்காக டாஸ்மாக் கடைகளை மட்டும் நம்பாமல் அரசு வருவாயை உயர்த்த பல வழிகள் உள்ளன. அவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும். கிராமசபை கூட்டங்களை நடத்தி மதுக்கடைகள் வேண்டாமென தீர்மானம் நிறைவேற்றலாம்.

தொடர்ந்து மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்து விட்டது. இனிவரும் தலை முறைகளையாவது காக்க வேண்டும் என தெரிவித்து, இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close