உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி சிலை கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை முதலில் தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Advertisment
சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன்மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதே போல், பொன் மாணிக்கவேலின் பதவி காலம் கடந்த 30 தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தன்னுடைய பதவி காலத்தை நீட்டிக்க உத்தரவிட கோரி பொன்மாணிக்கவேல் மற்றும் டிராபிக் ராமசாமி ஏற்கனவே தொடர்ந்த வழக்குகளும் இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி'யாக மீண்டும் பொன்.மாணிக்கவேலை மீண்டும் நியமிக்க கோரி தான் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என் யானை ராஜேந்திரன் முறையிட்டார்.
அப்போது, தமிழக அரசு தரப்பில், சிலை கடத்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்த வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், இந்த வழக்குகளில் உயர்நீதிமன்றம் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்ககூடாது என தெரிவித்தது.
மேலும், பொன்.மாணிக்கவேல் தன்னிச்சையாக செயல்பட்டார் எனவும், அரசுக்கு இதுவரை எந்த ஒத்துழைப்பு தந்ததில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.
ஏற்கனவே அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், அவரை மறு நியமனம் செய்ய முடியாது எனவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு படி சிலை கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை இந்த வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து, பொன்.மாணிக்கவேல் தனது தரப்பு வாதங்களை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.