பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுனத் தலைவர் ராமதாஸ் - மகன் அன்புமணி இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தனது மகள் வழிப்பேரரான முகுந்தன் பரசுராமனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்த நிலையில், அதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் . இதன்பின்னர், கூட்டணி விவகாரம், கட்சி செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அன்புமணி மீது தொடர்ந்து ராமதாஸ் அதிருப்தி அடைந்தார்.
இதன் காரணமாக, பா.ம.க தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டு, அவரை செயல் தலைவராக நியமித்தார். இதனைத் தொடர்ந்து நடந்த வன்னியர் மாநில மாநாட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற பா.ம.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் புறக்கணிப்பு போன்றவை ராமதாஸ் - அன்புமணி இடையே இருந்த விரிசலை அதிகப்படுத்தும் விதமாக அமைந்தது.
கடந்த மே மாத இறுதியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ராமதாஸ் அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதன்பிறகு, அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். ஆனால், அவரது நீக்கம் செல்லாது என அன்புமணி அறிவித்தார். இந்தப் பதவி நீக்கப் படலம் தொடர்ந்த நிலையில், பொதுக்குழுவை கூட்டுவது பற்றி இருவரும் மாறி மாறி அறிக்கை விட்டனர். புதுச்சேரியில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கையைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி அறிவித்தார்.
இதனிடையே, ராமதாஸ் தரப்பு பா.ம.க-வின் மகளிர் அணி மாநாட்டிற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி பூம்புகாரில் நடத்தத் திட்டமிட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பா.ம.க எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் இதன் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ராமதாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ராமதாஸால் பா.ம.க மாநில பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட முரளி சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பா.ம.க-வின் தலைவராக தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டிருக்கிறார் அன்புமணி. அவரது தலைவர் பதவிக் காலம் மே 28 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. அதனால் பா.ம.க-வின் பொதுக்குழு, செயற்குழு, அவசர பொதுக்குழு ஆகியவற்றை கூட்டும் அதிகாரமும் பொறுப்பும் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு மட்டுமே உள்ளது. அதனால் அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரிடம் தனியாக பேச வேண்டி உள்ளதால், இருவரையும் தன்னுடைய அறைக்கு நேரில் வர கூற முடியுமா ? என இரு தரப்பு வழக்கறிஞரிடமும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அன்புமணி தரப்பு வழக்கறிஞர் இதை ஏற்றுக் கொண்ட நிலையில், ராமதாஸ் தரப்பில் உறுதி அளிக்கப்படவில்லை.
இதையடுத்து, மாலை 5:30 மணிக்கு தன் அறைக்கு வரும்படி ராமதாஸ், அன்புமணி இருவருக்கும் அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது, கட்சியினர், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் யாருக்கும் அனுமதியில்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.