அனைத்து அதிகாரிகளின் அறைகளிலும் கேமரா பொருத்த வேண்டும்! – ஐகோர்ட் அதிரடி உத்தரவு

அனைத்து உயர் அதிகாரிகளின் அலுவலகங்களின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்

By: Updated: February 14, 2019, 02:09:33 PM

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் ஐ.ஜி. முருகன் மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டியை அமைத்து தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டிருந்தார்.

இந்த புகாரை விசாரித்த கமிட்டி, ஐ.ஜி. மீதான புகார் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரைத்தது. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதை எதிர்த்து புகாருக்கு ஆளான ஐ.ஜி. முருகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்த பாலியல் புகார் மீது 6 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்காதது துரதிருஷ்டவசமானது என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, வாதாடினார்.

அப்போது அவர் ‘ஐ.ஜி.க்கு எதிராக போலீசில் புகார் செய்யாமல், தான் பணியாற்றிய துறையின் இயக்குனரிடம் பெண் போலீஸ் சூப்பிரண்டு புகார் கொடுத்ததால், நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆனது’ என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதி, ‘பாலியல் கொடுமை தொடர்பாக பெண்கள் புகார் கொடுக்கும் போது, அதில் உள்ள நடைமுறை குறைபாடுகளை கருத்தில் கொள்ளாமல், உடனடியாக நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்’ என்று கூறினார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அதில், “பிறருக்கு அறிவுரை கூறுவதற்கு முன்பு அது போன்று நாம் செயல்படுகிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறி உள்ளார். எனவே அதன்படி நடக்க வேண்டும் என்பதால் என்னுடைய சேம்பர் உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு பதிவு துறைக்கு உத்தரவிடுகிறேன்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை வரையில் பெண் போலீஸ் அதிகாரி, ஐ.ஜி.மீது கொடுத்துள்ள பாலியல் புகார் பற்றி விசாரணை நடத்த கூடுதல் டி.ஜி.பி. லட்சுமி பிரசாத் தலைமையில் விசாரணை நடத்த விசாகா கமிட்டி அமைக்கிறேன்.

இந்த கமிட்டியில் போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணம்மாள், கனகா, டி.எஸ்.பி. ராமதாஸ், சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வல்ச ராகுமாரி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். 2 வாரத்துக்குள் பெண் போலீஸ் சூப்பிரண்டு அளித்த பாலியல் புகார் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டால் இந்த கமிட்டி ஐகோர்ட்டை நாடலாம்.

பாலியல் புகார் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் சட்டப்படி வழக்கை விரைவாக நடத்த வேண்டும். ஐ.ஜி. முருகன் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ளதால் பணி விதிகளின்படி தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண் அதிகாரிகள், ஊழியர்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் விதமாக அனைத்து உயர் அதிகாரிகளின் அலுவலகங்களின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ஐ.ஜி.முருகன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்” என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Madras high court camera to be fix in police officers office

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X