c-v-shanmugam | chennai-high-court |மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, வெளி மாநில தொழிலாளர்கள் பிரச்னை, கஞ்சா, மது புழக்கம் ஆகியவை தொடர்பாக நடந்த போராட்டங்களில் அமைச்சர் சி.வி. சண்முகம் பங்கேற்றார்.
அப்போது, “மு.க. ஸ்டாலினை கடுமையாக தாக்கிப் பேசினார்” என்றும் மோசமான இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்றும் சி.வி. சண்முகம் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் சி.வி. சண்முகம் மீது இரு பிரிவினர்களுக்கிடையே வெறுப்பை உண்டாகுதல், பொதுமக்களிடம் தவறான தகவலை அனுப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை தடை செய்ய கோரி சி.வி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று (பிப்.2,2024) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, அவர் மீதான 4 வழக்குகளின் விசாரணைக்கும் தடை விதித்தார். தொடர்ந்து, “ஆளுங்கட்சியை எதிர்த்து பேச உரிமை உள்ளது என்றாலும் எதற்காக மோசமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்? எனக் கேள்வியெழுப்பினார்.
மேலும், “எம்.பி.யாக உள்ள ஒருவர் கைத்தட்டலுக்காக இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை ஏற்றுகொள்ள முடியாது” என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“