சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து இன்று(அக்.19) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜுன் 14-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து இதய அறுவை சிகிக்சை செய்யப்பட்டது. சிகிக்சைக்குப் பின் அமலாக்கத் துறை அவரை காவலில் எடுத்து விசாரணை செய்தப் பின் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 2 முறை மனுத் தாக்கல் செய்யப்பட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பு மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. மருத்துவ தேவை இருப்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. ஆதாரங்கள், சாட்சியங்களை அழிக்க கூடும் என்பதால் அவருக்கு ஜாமின் வழங்க கூடாது என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரு தரப்பு வாதங்கள் நிறைவறைந்த நிலையில் இன்று(அக்.19) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இன்று காலை நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். அப்போது, செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் மருத்துவ காரணங்களை ஏற்க முடியாது என்றும் அவரது சகோதரர் இன்னும் தலைமறைவாக இருக்கும் நிலையில் ஜாமின் வழங்க முடியாது எனவும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“