சென்னை டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு சிலை அமைப்பதற்கு தடைசெய்ய பதியப்பட்ட வழக்கு, தற்போது வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டது.
கோவை பழனிசாமி தனது வழக்கை வாபஸ் பெற்றதால், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மறைந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஒட்டி, பள்ளிக் கல்வி இயக்குனரகம் உள்ள டி பி ஐ வளாகத்தில் அவரது சிலை அமைக்க தமிழக அரசு நவம்பர் 30ஆம் தேதி அறிவித்தது.
இதற்கு கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் சிலைகள் அமைக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மறைந்த தலைவர்களுக்கு சிலை வைப்பதற்கு பதிலாக, அவர்களின் பெயரில் நலத் திட்டங்கள் துவக்கினால் பொதுமக்களுக்கு பயனளிக்கும் என்றும், இவ்வாறு சிலை வைக்கும் பொழுது ஆட்சிக்கு வரும் காட்சிகள் தங்கள் தலைவர்களுக்கும் சிலை அமைப்பதற்கு தவறான முன்னுதாரமான மாறிவிடும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அன்பழகனுக்கு சிலை அமைக்கப்பட்டிருப்பதால், டிபிஐ வளாகத்தில் அவரது சிலையை அமைக்க தடை விதிக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில், மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்கி இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil