ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுக் குழுவில் தீர்மானங்களும் இயற்றப்பட்டன. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, மீண்டும் அ.தி.மு.க பொதுக் குழு கூடி சசிகலா, தினகரன் ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்கியும், கட்சியில் இருந்தும் நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.
ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தன்னை பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கியது செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை ஏற்றுக் கொண்ட உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், என். செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று(டிச.5) வழங்கப்பட்டது. அப்போது. அ.தி.மு.க-வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த சசிகலாவின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“