Madras High Court : தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையத்தில் 24 வயதான தொழில்நுட்ப வல்லுனர் கொல்லப்பட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகும், தென்னக ரயில்வேயில் க்ளோஸ் சர்க்யூட் தொலைக்காட்சி (சிசிடிவி) கேமராக்கள் / வீடியோ கண்காணிப்பு அமைப்பு (விஎஸ்எஸ்) நிறுவப்படாததற்கு சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை (செப்.27) அதிருப்தி தெரிவித்தது.
2016 ஜூன் 24 அன்று சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் எஸ்.சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் இது தொடர்பான மனுவை விசாரித்தனர்.
அப்போது, ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அமைப்பில் நிர்வாகத்தின் முழு அக்கறையின்மையை வெளிப்படுத்துவதாகவும், தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் உரிய காலக்கெடுவைக் கொண்டு சிசிடிவி கேமராக்கள் நிறுவ வேண்டும் எனவும் தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டனர்.
2016 ஆம் ஆண்டு, ஸ்வாதி படுகொலையை தொடர்ந்து, உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநலன் தொடர்பான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ரயில்வே பாதுகாப்புப் படை புதன்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
தமிழகத்தில் இதுவரை 35 ரயில் நிலையங்களில் சிசிடிவி/விவிஎஸ் நிறுவப்பட்டுள்ளதாகவும், மற்ற 407 ரயில் நிலையங்களிலும் 2024-25ஆம் ஆண்டுக்குள் வழங்கப்படும் என்றும் நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைப் பார்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சிய அணுகுமுறையால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், “சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம் சாப்ட்வேர் இன்ஜினியர் பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2016ல் இந்த நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தொடர்ந்து நீதிபதிகள், “இந்த நீதிமன்றம் அதன் பல்வேறு உத்தரவுகளின் கீழ் ஆகஸ்ட் 4, 2016 முதல் அனைத்து முக்கியமான இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்த்தது.
தற்போது ஏழரை ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் மாநிலத்தில் உள்ள 10% ரயில் நிலையங்களில் கூட சிசிடிவி கேமராக்கள்/வீடியோ கண்காணிப்பு அமைப்பு நிறுவப்படவில்லை.
எனவே இதில் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இந்த வழக்கு அடுத்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“