தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட முயன்றதாக, திமுக பிரமுகர் நரேஷை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கிய அதிமுகவினர், அவரது சட்டையை கழற்றி சாலையில் இழுத்து வந்தனர்.
இதுதொடர்பான புகாரில், ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட பல பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ஜெயக்குமாரை பிப்ரவரி 20ஆம் தேதி இரவு அதிரடியாக கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்தது, தொழிற்சாலை அபகரிப்பு என அடுத்தடுத்து வழக்குகள் அவர் மீது பதியப்பட்டன.
முன்னதாக ஜெயக்குமார் ஜாமீன் கேட்டு ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்திலும், சென்னை முதன்மை நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். ஆனால், இரு நீதிமன்றங்களிலும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜெயக்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று, ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை தரப்பில் கூறுகையில், இந்த வழக்கில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக பிரமுகர் நலமடைந்து வீடு திரும்பிவிட்டார். எனவே நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஜெயக்குமார் தரப்பிலும் நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் 2 வாரங்கள் புதன், வெள்ளிகிழமைகளில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற நிபந்தனைகளை மீறக்கூடாது, வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil