madras high court idol abduction case DGP - சிலை கடத்தல் வழக்குகளில் உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு - ஐகோர்ட்
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Advertisment
தமிழகத்தின் பொங்கிஷங்களை காப்பாற்ற வேண்டும் என்று நீதிமன்றம் செயல்ப்படுகிறதே தவிர எந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் செயல்படவில்லை எனவும் நீதிபதிகள் கருத்து.
சிலைக்கடத்தல் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என தமிழக அரசுக்கு எதிராக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை வந்தது.
Advertisment
Advertisements
அப்போது தமிழக அரசு தரப்பில், இந்த வழக்கில் ஆஜராக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீனிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இந்த நீதிமன்றம் தமிழகத்தின் பொங்கிஷங்களை காப்பாற்ற வேண்டும் என்று செயல்படுகிறதே தவிர எந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் செயல்படவில்லை என தெரிவித்தனர். சிலை கடத்தல் வழக்குகளில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு எனவும் தெரிவித்தனர்.
சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் கூடுதல் டிஜிபி ஒருவர் தலையிடுவதாகவும், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவில் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு எதிராகவே நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், மேலும் வழக்கு விசாரணைக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையோ, பிற அரசு துறைகளோ ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் தெரிவித்தார்.
அப்போது வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆஜராகி, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரி பொன் மணிக்கவேல் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பில், சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் இரு அமைச்சர்கள் தலையிட்டதாக கூறியுள்ளார் என்றும், அந்த இரு அமைச்சர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக எந்த ரகசிய அறிக்கையும் தங்களிடம் தாக்கல் செய்யப்படவில்லை என கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை மனுவாக தாக்கல் செய்ய இரு தரப்புக்கும் உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.