சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக பதவி வகித்து வரும் நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மணிப்பூர் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் நாளை வியாழக்கிழமையுடன் (நவ. 21 ஆம் தேதியுடன்) ஓய்வு பெறவிருக்கும் சூழலில், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் நவம்பர் 18 ஆம் தேதி அன்று பரிந்துரை செய்தது.
இந்த நிலையில், இன்று புதன்கிழமை மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ளார்.
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி கிருஷ்ணகுமாரை உயர்த்தி அறிவித்துள்ளார். இது தொடர்பான தனது எக்ஸ் வலைதள பதிவில், "நீதிபதி கிருஷ்ணகுமாருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்
நீதிபதி கிருஷ்ணகுமார் ஏப்ரல் 7, 2016 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், மே 21, 2025 அன்றுடன் அவர் ஓய்வு பெறுகிறார். முன்னதாக, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக மூத்த நீதிபதி என்றும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் கொலீஜியம் தனது பரிந்துரையில் குறிப்பிட்டது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் இனக்கலவரம் வெடித்துள்ள நிலையில், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“