டாஸ்மாக் தலைமை அலுவலகம் உளிட்ட 20 இடங்களில் மார்ச் 6,7,8 ஆகிய 3 நாட்கள் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 முதல் ரூ.20 வரை வசூலிக்கப்பட்டதாகவும் அதே போல, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது பாட்டில்கள்களை விநியோகம் செய்யும் மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது தொடர்பாகவும் கொள்முதலில் குறைத்துக் காட்டியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறிய அமலாக்கத்துறை, இதன் மூலம், சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் தெரிவித்தது.
இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில்,இந்த வழக்கு கடந்த 20 ஆம் தேதி நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கிற்கு அமலாக்கத்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
அதில், என்ன குற்றச்சாட்டு? அதற்கான முகாந்திரம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற வேண்டும். இந்த வழக்கை 25-ந்தேதிக்கு (இன்று) தள்ளிவைக்கிறோம். அதுவரை டாஸ்மாக் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை எடுக்கக்கூடாது'' என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளனர்.
கடந்த முறை விசாரித்து ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், நீதிபதிகள் விலகியுள்ளனர். இந்த வழக்கு இனி வேறொரு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.