New Update
நரம்பியல் கோளாறு காரணமாக உணர்ச்சியற்று இருக்கும் தன்னுடைய 10 வயது மகனை கருணைக் கொலை செய்யக் கோரி கடலூரைச் சேர்ந்த திருமேனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
Advertisment
மூளை பாதிப்புக்குள்ளான, 10 வயது சிறுவனை கருணை கொலை செய்ய இயலாது எனவும், நிரந்தரமாக குணப்படுத்த முடியாது எனவும் மருத்துவ நிபுணர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தனர். அறிக்கையை படித்து கண்கலங்கிய நீதிபதி கிருபாகரன், சிறுவனின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்குவது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கருணைக் கொலை - பரிசோதனை செய்த மருத்துவர்கள்
வலிப்பு நோயாலும், மூளை பாதிப்புக்கு உள்ளாகி உள்ள தனது 10 வயது மகனை , கருணைக் கொலை செய்ய அனுமதிக்க கோரி கடலூரைச் சேர்ந்த திருமேனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் அமர்வு, சிறுவனை பரிசோதனை செய்வதற்கான மருத்துவ நிபுணர்களை நியமித்து உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, கடலூரில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்ட சிறுவனை, ஓய்வு பெற்ற நரம்பியல் துறை பேராசிரியர் திலோத்தம்மாள், ஸ்டான்லி மருத்துவமனை இயக்குநர் ரவிச்சந்திரன் மற்றும் காஞ்சி காமகோடி மருத்துவமனை குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவர் பால ராமச்சந்திரன் ஆகியோர் பரிசோதனை செய்தார்கள். சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அச்சிறுவனக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள், சிறுவனை குணப்படுத்த முடியாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், சிறுவனுக்கு நிதி உதவி பெற்றுத் தர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். ஆனாலும், பிற்காலத்தில் பெற்றோர் இல்லாமல் சிறுவனுக்கு ஏற்படும் நிலையை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அப்போது, நீதிபதி கிருபாகரன், கண்கலங்கி விட்டார். சிறுவனை பராமரித்துக் கொள்ள தொண்டு நிறுவனம் தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அச்சிறுவனின் தந்தை ஏற்க மறுத்து விட்டார்.
கருணைக் கொலை - விசாரணை ஒத்தி வைப்பு
இதையடுத்து, சிறுவனின் பெற்றோருக்கு மாதாந்திர நிதியுதவி வழங்க முடியுமா? என்பது குறித்தும், மருத்துவ உதவி வழங்க முடியுமா? என்பது குறித்தும் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுபோன்ற சிறுவர்களுக்கு உதவி வழங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஏன் திட்டம் வகுக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி, விசாரணையை வரும் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.