தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க தேர்தல் தொடர்பான சர்ச்சை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை கடந்த பிப்ரவரி 20 அன்று விசாரித்த நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி சாதியை மையப்படுத்தும் சங்கங்களை, சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? என்றும், பள்ளி, கல்லூரிகளின் பெயரில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் இதுதொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (மார்ச் -6) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜராகி இருந்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே இரண்டு முறை அவகாசம் வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டிய நீதிபதி பரத சக்கரவர்த்தி, அரசு பள்ளியில் சேரும் போது சாதிகள் இல்லையடி பாப்பா என்றும், சாதி இரண்டொழிய வேறில்லை என்றும் கற்றுக் கொடுத்தது. இன்று நீதிபதியான நிலையில், படித்த பாடங்களின் அடிப்படையில் நிற்க வேண்டாமா? எனக் கேள்வி எழுப்பினார்.
குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே உறுப்பினராக இருக்கலாம் என்ற விதியை திருத்தும்படி சங்கங்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக் காட்டிய நீதிபதி, அந்த உத்தரவுகள் காகிதத்தில் மட்டுமே இருப்பதாகவும், எந்த சங்கங்களும் தங்கள் விதிகளில் திருத்தங்கள் செய்யவில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.
மேலும், பள்ளிகளில் சாதி இருக்க கூடாது என நீதிபதி சந்துரு குழு அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்ட போதும் பள்ளிகளின் பெயரில் இன்னும் சாதி நீடிப்பது வேதனையளிக்கிறது எனவும், அரசு பள்ளிகளில் எப்படி ஜாதிப் பெயர் இருக்க முடியும்? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். "நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் சாதியை தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள். படிப்படியாகவே மாற்றத்தை கொண்டு வர முடியும். அதற்கான நேரம் இது" என்றும் நீதிபதி தெரிவித்தார்.
"கை ரிக்சாவை ஒழித்தது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழக அரசு மேற்கொண்ட நிலையில், இந்த விஷயத்தில் அரசு ஒரு முடிவு எடுத்தால் நாளைய வரலாறு அதனை நினைவு கொள்ளும். சாதி சங்க விவகாரத்தில் நிலைபாட்டை தெரிவிக்க தமிழக அரசுக்கு கடைசி வாய்ப்பாக மார்ச் 14 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. அன்றைய தினம் அரசு விளக்கம் அளித்தாலும் இல்லாவிட்டாலும் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும்" என்றும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.