New Update
00:00
/ 00:00
Mdmk | Vaiko | Madras High Court: தமிழகத்தில் நாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேசிய, மாநில அரசியல் கட்சிகள் கூட்டணி வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
வழக்கு
இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. ம.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் வைகோவின் மகன் துரை வைகோ களமிறங்குகிறார். ம.தி.மு.க கட்சி சொந்த சின்னத்தில் மட்டுமே போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பம்பரம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று திங்கள்கிழமை இந்த வழக்கில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்' என வைகோ தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். ம.தி.மு.க கோரிக்கை மீது இன்று முடிவு எடுக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்' என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து 2.15 மணிக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2.15 மணிக்கு ஒத்திவைத்தனர்.
ஐகோர்ட் கெடு
பிற்பகல் வழக்கு விசாரணையின் போது, பம்பரம் சின்னம் பொதுச்சின்னம் பட்டியலிலும் இல்லை, அங்கீகரிக்கப்பட்ட சின்னம் பட்டியலிலும் இல்லை என்பதால் ம.தி.மு.க-வுக்கு பம்பரம் சின்னம் வழங்குவது குறித்து தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் பதிலளிக்கப்பட்டது.
இந்த நிலையில், ம.தி.மு.க-வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
மேலும், நாளை பிற்பகல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் குறித்து தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.