மாநிலத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மத்திய அரசின் ஓபிசி இடஒதுக்கீடு அமல்படுத்த முடியாது – திமுக வாதம்

தமிழகத்தில் 50% ஓபிசி இடஒதுக்கீடு வழங்கும் மாநிலத்தின் 1993 சட்டம், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய இடஒதுகீடு இடங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் வில்சன் வலியுறுத்தினார்.

madras high court

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி, திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு பெற உரிமை உள்ளதாகவும், இந்த இட ஒதுக்கீட்டை எப்படி வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய மத்திய – மாநில சுகாதார துறை செயலாளர்கள், மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று (ஆகஸ்ட் 18) விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்காக (EWS) இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை சமர்பித்த மனுவில், மத்திய அரசின் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு மற்றும் EWS-க்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கான உத்தரவு திமுகவுக்கு ஏற்புடையது இல்லையென்றால், அக்கட்சி அதை நீதிமன்றத்தில் எதிர்க்கலாம். ஆனால், மத்திய அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக கூற முடியாது என்று தெரிவித்தார்.

திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், பிற்படுத்தப்பட்டோர் பிரிவை பாதிக்கும் எந்தவொரு முக்கிய கொள்கை விஷயங்களுக்கும் தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்தை ஆலோசிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

மத்திய பட்டியலிலும், மாநிலப் பட்டியலிலும் உள்ள ஓபிசி-களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்ட முயன்ற வழக்கறிஞர் வில்சன், மத்திய கல்வி நிறுவனங்களில் இடங்களை நிரப்புவதற்கு மத்திய கல்வி நிறுவன சட்டம் 2006 விரும்பத்தக்கது என்றும், மாநில மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை நிரப்புவதற்கு பொருத்த முடியாது என்றும் வாதிட்டார்.

மத்திய அரசு தேர்ந்தெடுத்திருப்பது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று சொல்ல முடியாது என்றும் அவர்களின் விருப்பப்படி பிற்படுத்தப்பட்டோர் விகிதத்தை சரிசெய்யவும் முடியாது என்று வழக்கறிஞர் வில்சன் கூறினார்.

தமிழகத்தில் 50 சதவீத ஓபிசி இடஒதுக்கீடு வழங்கும் மாநிலத்தின் 1993 சட்டம், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய இடஒதுகீடு இடங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை வழக்கறிஞர் வில்சன் வலியுறுத்தினார். மேலும், மத்திய அரசு பரிந்துரைத்த 27 சதவிகித இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தக்கூடாது என்று மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் பரிந்துரைத்தார். இந்த ஆண்டுக்கான இடைக்கால நடவடிக்கையாக, எஸ்சி பிரிவினருக்கு 18 சதவிகிதம், எஸ்டி பிரிவினருக்கு 1 சதவிகிதம், ஓபிசி பிரிவினருக்கு 31 சதவிகிதம் இடஒதுக்கீட்டை பரிசீலிக்க வேண்டும். EWS-க்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை தவிர்த்து அதை எதிர்த்துப் போராடும் உரிமையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார். நீண்ட போராட்டங்களுக்குப் பின் கிடைத்த இடஒதுக்கீட்டை பறிக்கக் கூடாது என்று வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Madras high court on obc reservation dmk and centre arguments

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com