மணல் மாஃபியா போல, தண்ணீர் மாஃபியா அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
Advertisment
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட கோனாம்பேடு பகுதியில் குளங்களில் டேங்கர் லாரிகள் மூலம் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படுவதை தடுக்க கோரியும், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் கோனாம்பேடு கிராம பொது நல சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்மந்தப்பட்ட இடத்தை 8 வார காலத்திற்குள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு அமல்படுத்தப்படாததை அடுத்து, மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழகத்தில் மணல் மாஃபியா போல, தண்ணீர் மாஃபியா அதிகரித்து வருவதாகவும், தமிழகத்தில் தண்ணீரை தேக்கி வைக்க போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், தற்போது விழித்து கொள்ளவில்லை என்றால், எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தனர்.
மேலும், மனு குறித்து இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.