Madras Court Bans Online Medicine Sales: ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குப்படுத்த புதிய விதிகளை ஜனவரி 31ம் தேதிக்குள் வகுக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய தடைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த மனுவில் பல பதிவு செய்யப்படாத ஆன்லைன் கடைகள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும், மருத்துச் சீட்டு இல்லாமல் ஆன்லைன் மூலம் மருந்துகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்களுக்கு காலாவதியான, போலியான, தவறான மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும், ஆன்லைனில் மருந்துகள் வாங்குவது மற்றும் விற்பனை செய்வது என்பது பொதுமக்கள் உயிருக்கு அபாயகரமானது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வது சட்டவிரோதமானது, ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உரிமம் பெறாத, பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசின் சுகாதாரத் துறை, 'மருந்து கட்டுப்பாட்டு சட்டம் என்பது மத்திய அரசின் சட்டம் ஆகும். ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்யும் அதிகாரம் அல்லது ஒழுங்குப்படுத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. இதனை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசின் கையில்தான் உள்ளது' என்றும் குறிப்பிட்டிருந்தது.
இதனையடுத்து, இந்த வழக்கு டிசம்பர் 10 ஆம் தேதி நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய விதிகளை தற்போது வரைவு அறிக்கையாக தயார் செய்துள்ளதாகவும், அதன் மீது பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி சட்டம் கொண்டு வர உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து வழக்கின் தீர்ப்பினை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ஆன்லைனில் மருந்து விற்பனையை முறைப்படுத்த விரைந்து விதிகளை மத்திய அரசு வகுக்க வேண்டும். அந்த விதிகளை ஜனவரி 31க்குள் வகுத்து வெளியிட வேண்டும். மத்திய அரசு விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய தடை விதிப்பதாகவும், இது தொடர்பாக ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையே நீக்க முடியாது என தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
மேலும் புதிய விதிகளை வகுத்து மத்திய அரசு அரசிதழில் வெளியிட்ட பின் இரண்டு மாதங்களில் மத்திய அரசுக்கு மருந்து விற்பனை நிறுவனங்கள் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் விண்ணப்பித்து ஆன்லைன் உரிமம் பெற வேண்டும்.
அனுமதி கோரி விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் புதிய விதிகளின் படி உள்ளதா என்பதை மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, தற்போது ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிப்பதாகவும் தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.