சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து பொது தீட்சிதர்கள் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நடராஜர் கோயில் கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்தெந்த நேரங்களில் அனுமதிக்கப்படுவர், என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது குறித்த திட்டம் வகுத்து தாக்கல் செய்யப்படும் என பொது தீட்சிதர்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.செளந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிசங்கர், ஆறுகால பூஜைகள் நடைபெறும் நேரங்கள் தவிர்த்து இடைப்பட்ட நேரத்தில் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக சாய்தளப்பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனக்கூறி அறிக்கை தாக்கல் செய்தார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், ‘‘பக்தர்கள் கனகசபையில் நின்று நேரடியாக சுவாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். அதைவிடுத்து ஆறு கால பூஜை தவிர்த்து மற்ற நேரங்களில் ஒரு ஓரத்தில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்பதை ஏற்க முடியாது. அதேபோல தற்போது கனகசபைக்கு கிழக்குப் பகுதியில் வருபவர்கள் சுவாமி தரிசனம் முடித்து மேற்குப்பகுதியில் இறங்கி செல்லும் வகையில் கிழக்கு நுழைவாயிலை திறந்து ஒருவழிப்பாதையாக மாற்றினால் மட்டுமே கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும் என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘கோயில் திறக்கப்படும் 11.30 மணி நேரத்தில் ஆறு கால பூஜைகள் மற்றும் பால், நைவேத்தியம் போன்ற பிற பூஜைகள் தினமும் 8.30 மணி நேரத்துக்கு நடைபெறும் எனவும், எஞ்சிய 3 மணி நேரம் மட்டும் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் எனக் கூறப்பட்டுள்ளது.
எனவே, அந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பக்தர்களை கனகசபையில் அனுமதிக்கும் விதமாகவும், பக்தர்கள் ஒரே வழியில் சென்று திரும்புவதை தவிர்க்கும் விதமாகவும் கட்டிடக்கலை வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து திட்டம் வகுத்து அதை பொது தீட்சிதர்கள் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் மார்ச 6-க்கு தள்ளி வைத்துள்ளனர். அதேபோல அறநிலையத் துறையும் கனகசபையில் பக்தர்களை எந்தெந்த நேரங்களில் அனுமதிக்கலாம் என்பது குறித்தும், நெரிசலை தவிர்ப்பதற்கான மாற்று வழிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
க.சண்முகவடிவேல்.