சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வந்தவர் நரம்பியல் மருத்துவர் சுப்பையா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் உள்ள சொத்து தொடர்பாக இந்த கொலை அரங்கேறியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது
நில பிரச்சனை
டாக்டர் சுப்பையா படுகொலை அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பைப் பூர்வீகமாகக் கொண்டவர் டாக்டர் சுப்பையா. இவரது தாய்மாமா பெருமாள் தம்முடைய சொத்துகளை டாக்டர் சுப்பையாவின் அம்மா அன்னக்கிளிக்கு எழுதி வைத்தார்.
இதற்கு தாய்மாமா பெருமாளின் 2-வது மனைவி அன்னபழம் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அன்னபழத்துக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது. ஆனால் டாக்டர் சுப்பையாவின் தாயார் அன்னக்கிளி இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தார். இதன் பின்னர் இருதரப்பும் சமாதானமாகி டாக்டர் சுப்பையாவின் தாயார் அன்னக்கிளிக்கு 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு பிரச்சனை அப்போதைக்கு தீர்த்து வைக்கப்பட்டது.
சிக்கல்
ஆனால், சில ஆண்டுகளுக்குப் பின்னர் அன்னபழத்தின் மகன் - அரசு பள்ளி ஆசிரியரான பொன்னுசாமி, அன்னக்கிளிக்கு 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதனையடுத்து டாக்டர் சுப்பையா 2.5 ஏக்கர் நிலத்தை மனைவிக்கு எழுதி வைத்தார். இந்த நிலத்துக்கு எவர் ஒருவரும் உரிமை கோராமல் இருக்க நீதிமன்றத்தில் தடையும் வாங்கினார். அத்துடன் பொன்னுசாமி மீது போலீசில் புகார் கொடுத்தும் வைத்தார்.
படுகொலை
இதனையடுத்து, 2013-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி டாக்டர் சுப்பையா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப் படையினரால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற டாக்டர் சுப்பையா 2013-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி உயிரிழந்தார்.
கைது - தண்டனை
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் பொன்னுசாமி உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அய்யப்பன் என்பவர் அப்ரூவரானார். சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் டாக்டர் சுப்பையா கொலை வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி தீர்ப்பளித்தார்.
அதில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரில் அப்ரூவர் அய்யப்பன் தவிர பொன்னுச்சாமி, வில்லியம்ஸ், போரிஸ், செல்வ பிரகாஷ், முருகன், பேசில், மேரி புஷ்பம், ஜேம்ஸ் சதீஷ்குமார், ஏசு ராஜன் ஆகிய 9 பேர் கொலைக் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். அத்துடன் பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதித்து உத்தரவிட்டார். மேலும், மேரி புஷ்பம், ஏசு ராஜன் ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், அப்ரூவர் அய்யப்பனுக்கு தண்டனை எதுவும் விதிக்காமலும் உத்தரவிட்டார்.
அப்பீல்
இதனைத் தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விசாரணை நீதிமன்றம் வழக்கு விவரங்களை அனுப்பி வைத்தது. அதேநேரத்தில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனு மீது கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் இதனை விசாரித்தனர். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்டோர் சார்பாக வழக்கறிஞர் சவுத்ரி, மூத்த வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ, ஜான் சத்யன் ஆஜராகி வாதாடினர். அனைத்துத் தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தீர்ப்பு
இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்தனர். 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் இருவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து, அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் உத்தரவிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.