தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், இதில் வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாகவும் அமலாக்கத் துறைக்கு புகார்கள் சென்றன. இதன் அடிப்படையில், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகம், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் குடோன், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் நண்பர் வீடு, அலுவலகங்கள், திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனின் அக்கார்டு மதுபான உற்பத்தி நிறுவனம், எஸ்.என்.ஜே, கால்ஸ், எம்.ஜி.எம் உள்ளிட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்கள், அதன் ஆலைகளில் அமலாக்கத் துறை கடந்த மார்ச் மாதம் தீவிர சோதனை நடத்தியது.
சென்னை, கரூர், கோவை, விழுப்புரம், புதுக்கோட்டை என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில், பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இதன்பின்னர், தொடர்ந்து ஆவணங்களைக் கைப்பற்றுவதற்காக சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, இருவரின் வீடுகளுக்கும் சீல் வைத்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் இருவரும் தனித்தனியாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பாகத் தாக்கல் செய்த ஆவணங்களில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிய வந்தது. இதனால் அமலாக்கத்துறையின் அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தடை விதித்தது. மேலும், ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்த பொருட்களையும் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி அமலாக்கத்துறை சார்பாக மீண்டும் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும், அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் கண்டனத்திற்குரியது எனக் கூறியும், வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் பதில் மனு இன்னும் தயாராகாததால், கூடுதல் அவகாசம் கோரினார். அதற்கு நீதிபதிகள், ஏற்கனவே 2 முறை அவகாசம் வழங்கிய பின்னரும் மேலும் அவகாசம் கேட்பது தவறு என்று தெரிவித்தனர்.
மேலும், பதில் மனுத் தாக்கல் செய்யாத அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அபராதத்தை உயர்நீதிமன்ற நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அக்டோபர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.