ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நல குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தலை அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
இதனால் தி.மு.க. - நாம் தமிழர் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தி.மு.க. சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். தி.மு.க. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலுக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்தை தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். இதேபோல், நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் வாக்குகளை சேகரித்து வருகிறார்.
ஐகோர்ட் சரமாரி கேள்வி
இந்நிலையில், ஈரோடு கிழக்கில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்க கோரிய கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.பி.எம்.ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், 2023 இடைத்தேர்தலில் பின்பற்றப்பட்ட கொட்டகை பாணியை, நடப்பு இடைத்தேர்தலில் தடுக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவை பரிசீலிக்கவில்லை என்று தெரிவித்தார்.
இந்த வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்?, யார் தான் சலுகைகள் வழங்கவில்லை? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்ப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.