நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் இரவு-பகல் பாராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தொழிலாளர்களுடன் கோட்டாட்சியர் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள், என்.எல்.சி. நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. மேலும், என்.எல்.சி. நிறுவன வளாகத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களை வேறு இடத்திற்கு மாற்ற கோரி கடலூர் மாவட்ட காவல்துறைக்கு என்.எல்.சி. நிர்வாகம் கடிதம் அனுப்பியது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதில், என்.எல்.சி. பிரச்சனை தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையிலானது. இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.
தீர்வு காண மத்தியஸ்தர் நியமனம் குறித்து என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். என்.எல்.சி. வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று தெரிவித்தது. அதோடு, ஆகஸ்ட் 22ம் தேதி வரை மத்திய அரசுக்கு அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil