சென்னை கிண்டி சிட்கோ பகுதியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பு மனையிடத்தை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கெனவே சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்தபோது போலி ஆவணங்கள் தயாரித்து தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் அளித்த புகாரின்பேரில் கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் தற்போது அமைச்சராக உள்ள மா.சுப்பிரமணியன் மீது நில அபகரிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
போலி ஆவணங்கள் தயாரித்துதல், ஏமாற்றுதல், கூட்டுச்சதி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு காவல்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணையைத் தொடர சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், மா.சுப்பிரமணியன் மீதான நிலஅபகரிப்பு வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றம் அவரது மனைவி காஞ்சனா இருவரும் ஆஜராகவில்லை.
மேலும், மா.சுப்பிரமணியன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அமைச்சரவை கூட்டம் நடப்பதால் இன்று விசாணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றச்சாட்டு பதிவுக்காக மா. சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா இருவரும் மே மாதம் 6 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளார். அத்துடன், அன்றைய தினம் இருவருக்கும் எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என நீதிபதி ஜெயவேல் தெரிவித்தார்.