Madras High Court ordered to Central on NEET fraud: நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு குழு அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 207 நிர்வாக ஒதுக்கீடு (மேனேஜ்மெண்ட் கோட்டா) இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்பக்கோரி அரசுக்கு உத்தரவிட கோரி கோவையை சேர்ந்த தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், வேல்முருகன் அமர்வு, நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ. டி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது,சி.பி.சி.ஐ.டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இந்தியா முழுவதும் 38,000 மருத்துவ கல்வி இடங்களுக்காக 14 லட்சம் பேர் நீட்தேர்வு எழுதியதாகவும், அதில் தமிழகத்தில் 4250 பேர் நீட் தேர்வு மூலம் மருத்துவ கல்லூரிகளில்
சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 4 மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,
தமிழகத்தில் நிரப்பப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில் சேர்ந்துள்ள 4250 மாணவர்களின் கைரேகையை தாக்கல் செய்யுமாறு தேசிய தேர்வு முகமையிடம் கோரியுள்ளதாகவும், இதுவரை சந்தேகிக்கப்படும் 19 மாணவர்கள் மீதான கைரேகை பெறப்பட்டு, தேர்வு எழுதியபோது பதியப்பட்ட கைரேகையும் தற்போது கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவரின் கை ரேகையும் ஒத்துப் போகிறதா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் தமிழகத்தை கடந்து வெளிமாநிலங்களிலும், இந்தியா முழுதும் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்களிலும், இடைத்தரகர்களிடமும் விசாரிக்க வேண்டி வரும் என்பதால் இந்த வழக்கில் சிபிஐ பதில் மனு தாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், பெற்றோர்களின் பேராசையே இது போன்றதொரு விளைவை மாணவர்களுக்கு ஏற்படுத்துவதாகவும், சம்பந்தபட்ட மாணவர்களின் நலன் கருதி அவர்களது புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளியிடக்கூடாது எனவும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குமாறும் அறிவுறுத்தினர்.
ஆள்மாறாட்ட விவகாரத்தால் ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களின் மருத்துவ கல்வி இடங்கள் பறிபோய் இருக்கும் பட்சத்தில், ஆள்மாறாட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தங்கள் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளனரா என்பது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனவும், மத்திய அரசும் இது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 24 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.