சமரச சுதா சன்மார்க்க சத்திய சங்கத்தை 1865 இல் நிறுவியவர் வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகள். 19 ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து விளங்கிய அவருக்கு அவரது பக்தர்கள் 105.76 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினர். இந்த நிலம் பிற்காலத்தில் வள்ளலார் சத்திய ஞான சபை வசம் சென்றது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தின் சத்திய ஞான சபை முன்பு இருக்கும் 70 ஏக்கர் பரப்பில் உள்ள பெருவெளியில் சுமார் 99.99 கோடி ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஒப்புதல் அளித்து, தமிழக அரசு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தனித்தனியே மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சர்வதேச தரப்பில் ரூ.99 கோடி செலவில் அமைக்கவுள்ள சர்வதேச வள்ளலார் மையத்துக்கு தேவையான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது வள்ளலார் சத்திய ஞான சபை அமைந்துள்ள 71.24 ஏக்கர் பரப்பளவு நிலம் வழிபாட்டு நிலம் என்பதால் அங்கு எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ள கூடாது என மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கபட்டது. அதற்கு குறுக்கிட்ட நீதிபதிகள் குற்றச்சாட்டுகளாக செல்ல வேண்டாம். அதில் உள்நோக்கம் உள்ளது. அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டியது அரசின் கடமை என்று கூறினர். நாளை அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் அப்போது அரசின் மீது தான் குறை கூறிவீர்கள் என்றும் குறிப்பிட்டனர்
தொடர்ந்து, கோவிலுக்கு பக்தர்கள் 105.76 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்த நிலையில், அரசு தரப்பில் 71.24 ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாக கூறியது பற்றி நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அப்போது இந்து அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர். அருண் நடராஜன் கடந்த 1934 ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை இந்த கோவிலை கட்டுப்பட்டில் எடுத்தபோது, 71.24 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்ததாக குறிப்பிட்டார். 6.5 ஏக்கர் நிலத்தை ஆகிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி 27.86 ஏக்கர் நிலம் ஆகிரமிப்பில் உள்ளதாகவும் சுட்டிகாட்டினார். ஆகிரமிப்பாளர்களின் தூண்டுதலால் தான் வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானத்திற்கு எதிராக வழக்கு தொடர்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்பில் உள்ள சத்திய ஞான சபைக்கு சொந்தமான 27.86 ஏக்கர் நிலத்தை அடையாளம்கான இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைத்து 1 மாதத்திற்குள் அடையாளம்கான வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் சத்திய ஞான சபை மீது அக்கறை உள்ளவர்கள் ஆகிரமிப்பாளர்கள் குறித்த பட்டியலை தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 5-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“