தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் முதியோர் இல்லங்கள் மற்றும் காப்பகங்களில் சமூக நலத்துறை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையிலுள்ள தனியார் முதியோர் இல்லத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என கோவையை சேர்ந்த சிவராமன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் தனியார் முதியோர் காப்பகங்களில் அடிப்படை வசதியை உருவாக்கவும், இதனை கண்காணிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் முதியோர் இல்லங்கள் மற்றும் காப்பகங்கள் குறித்து சமூக நலத்துறை அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழக சமூக நலத்துறை செயலாளர் கே.மணிவாசன் நேரில் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழகம் முழுதும் முதியோர் இல்லங்களை பராமரிப்பது குறித்த 2016 ஆம் ஆண்டு தமிழக பிறப்பித்த அரசாணையை கண்டிப்புடன் பின்பற்ற காப்பக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் மானியத்தின் மூலம் 144 அரசு முதியோர் இல்லங்கள் செயல்பட்டுவருவதாகவும், பதிவு செய்யப்பட்ட மற்றும் தனியார் இல்லங்கள் 133 உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த முதியோர் இல்லங்களை அந்தந்த மாவட்ட குழுக்கள் நேரில் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், பதிவுசெய்யப்படாத இல்லங்களை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு ஒரு கோடியே 65 லட்ச ரூபாய் செலவில் நிமோனியா தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச மூத்த குடிமக்கள் தினம் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கொண்டாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கோரி 2 ஆயிரத்து 514 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, ஆயிரத்து 823 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மேலும் மூத்த குடிமக்களின் குறைகளை கேட்பதற்காக 81 தீர்ப்பாயங்கள் அமைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை படித்து பார்த்து, திருப்தி அடையாத நீதிபதிகள், விரிவான பதில் இல்லை என தெரிவித்தனர்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், அனைத்து மாவட்டங்களில் உள்ள முதியோர் இல்லங்கள் மாவட்ட ஆட்சியர்களும், கோவையில் உள்ள முதியோர் இல்லங்களை சமூக நலத்துறை செயலாளரும் நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கை மார்ச் 19ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.