/indian-express-tamil/media/media_files/2025/03/06/vWpgmGaCJG38dQRcGslT.jpg)
தொலைபேசி ஒட்டுக்கேட்பு சட்டவிரோதம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தனிநபர் ரகசிய காப்புரிமை (Right to Privacy) என்பது தற்போது வாழும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதால், குற்றங்களைக் கண்டறிவதற்காக தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது சட்டவிரோதமானது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பில், தொலைபேசி ஒட்டுக்கேட்பு என்பது பொது அவசரகால சூழ்நிலைகளிலும் அல்லது பொதுப் பாதுகாப்பு நலனிலும் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று குறிப்பிட்டார். இந்தச் சூழ்நிலைகள் ரகசியமானதாக இருக்க முடியாது என்றும், ஒரு சாதாரண மனிதருக்கு அது வெளிப்படையாக தெரியும் என்றும் கூறினார். இந்த வழக்கில் சிபிஐ மேற்கொண்டது போன்ற ரகசிய கண்காணிப்பு, இந்திய தந்தி சட்டம், பிரிவு 5(2) இன் கீழ் வராது என்றும் நீதிபதி தெளிவுபடுத்தினார்.
வழக்கின் பின்னணி:
எவரான் எஜுகேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிஷோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது நீதிமன்றம் இந்த முக்கிய கருத்துக்களைத் தெரிவித்தது. தனது தகவல்தொடர்புகளை ஒட்டுக்கேட்க சி.பி.ஐ. 2011-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கிஷோர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த தொலைபேசி ஒட்டுக்கேட்பின் அடிப்படையில், கிஷோர் மற்றும் அண்டாசு ரவீந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரவீந்தர், கிஷோரிடம் இருந்து 116 கோடி ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டியதை மறைக்க ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. சிபிஐ தரப்பில், ஊழலைத் தடுக்கவும் விசாரிக்கவும் ஒட்டுக்கேட்பு அவசியம் என்றும், இது பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும் வாதிடப்பட்டது. ஆனால், நீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்க மறுத்துவிட்டது.
நீதிமன்றத்தின் முக்கிய அம்சங்கள்:
சிபிஐ பிரமாண பத்திரத்தின்படி கூட, ஒட்டுக்கேட்கப்பட்ட உரையாடல்கள் விதிகள் 419-Aன் கீழ் மறுஆய்வுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. "ஒரு அரசியலமைப்பற்ற உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது பிரிவின் கீழ் செல்லாது, அதிலிருந்து எந்த உரிமைகளோ (அ) பொறுப்புகளோ உருவாக முடியாது" என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் பொருத்தமானதாக இருந்தாலும் ஏற்கத்தக்கது என்ற சிபிஐயின் வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது. சட்டத்தின் பிரிவு 5(2)ன் நோக்கத்தை விரிவுபடுத்த சிபிஐ கோரியபோது, "அடிப்படை உரிமையை மீறுவதற்கான வரம்புகளை சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு மட்டுமே உள்ளது, நீதிமன்றத்திற்கு அல்ல" என்று நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இறுதியாக, நீதிமன்றம் கிஷோரின் மனுவை ஏற்று, அவரது தொலைபேசியை ஒட்டுக்கேட்க அனுமதித்த சிபிஐ உத்தரவை ரத்து செய்தது. இந்தத் தீர்ப்பு தனிநபர் ரகசிய காப்புரிமைக்கு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.