Madras High Court Questioned on Tamilnadu Govt on Medical Admission: தமிழகத்தில் ஆள் மாறாட்டம் செய்து எத்தனை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 207 நிர்வாக ஒதுக்கீடு (மேனேஜ்மெண்ட் கோட்டா)இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்பக்கோரி கோவையை சேர்ந்த தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாட்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடு, அகில இந்தியா மற்றும் மாநில அரசின் இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை மதிப்பெண்களுடன் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும், சமீப காலமாக மருத்துவ படிப்பில் சேர பல முறைகேடுகள் நடைபெறுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மாணவர் உதித் சூர்யா மோசடி செய்த விவகாரத்தை சுட்டிக்காட்டினர். மேலும், நீதிபதிகள் தமிழக அரசிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அவை:
* ஆள்மாறாட்டம் மூலமாக எத்தனை மாணவர்கள் இதுவரை மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்?
* நீட் தேர்வு எழுதும் போது மாணவர்கள் காண்பிக்கும் அடையாள அட்டையும் அதே மாணவர்கள் கல்லூரியில் சேரும் போது காண்பிக்கும் அடையாள அட்டையும் ஆய்வு செய்யப்படுகிறதா.?
* தேனி மருத்துவ கல்லூரி மாணவன் உதித் சூர்யா-வின் வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது.
* உதித் சூர்யா மோசடி செய்தது தெரிந்த பிறகும் தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மையா..?
* நீட் தேர்வின் போது பின்பற்ற வேண்டிய அனைத்து நடைமுறைகளையும் அதிகாரிகள் முறையாகப் பின்பற்றுகிறார்களா..?
* இரட்டை வசிப்பிட சான்றிதழ் பெற்று மோசடி செய்துள்ளார்களா..?
என்பது உள்ளிட்ட 7 கேள்விகளுக்கு நாளை பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணை நாளைக்கு தள்ளிவைத்தனர்.