Seeman | madras-high-court: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக கடந்த 2011ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார் நடிகை விஜயலட்சுமி. இந்த வழக்கில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி மீண்டும் புகார் அளித்தார்.
இருப்பினும், சீமான் மீதான புகாரை சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக வாபஸ் பெற்றார். தனி ஒருவராக போராட தன்னால் முடியவில்லை என்றும், சீமானை எதிர்கொள்ள தனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என்றும் நடிகை விஜயலட்சுமி கூறியிருந்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் 2011-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்ற பிறகும் சீமான் மீதான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் இது தொடர்பாக போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் விஜயலட்சுமியின் புகார்கள், வாபஸ் பெற்ற விவரங்களை போலீசார் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதோடு, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை போலீசாருக்கு வழங்கவேண்டும் என்று சீமான் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வருகிற 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“