பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீது கனிமொழிக்கு எதிராக பேசியது உள்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதுமட்டுமின்றி திண்டுக்கல் இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் ஹெச். ராஜா தரக்குறைவாக பேசினார் என்ற வழக்கும் உள்ளது.
மேலும் தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என ட்விட்டரில் ஹெச். ராஜா தெரிவித்ததாக வழக்கு ஒன்றும் உள்ளது. இதுபோன்ற 11 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தப் புகார்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இவை செவி வழி செய்தியாக உள்ளன. இந்தப் புகார்களுக்கு எவ்வித ஆதாரமும் கிடையாது என வாதிடப்பட்டது.
தொடர்ந்து, தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என்று கூறியதாக தொடரப்பட்ட வழக்குக்கும் ஆதாரம் இல்லை என ஹெச். ராஜா தரப்பினர் கூறினர்.
அதேநேரம் கனிமொழி தொடர்பான வழக்கில், கனிமொழி எவ்வித புகாரும் அளிக்கவில்லை. 3ம் தரப்பினர் புகார் அளித்துள்ளார் என கூறப்பட்டது.
இந்த நிலையில், ஹெச். ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய நீதிபதி மறுத்துவிட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை தொடரும் என உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“