பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி கோவை சைபர் கிரைம் போலீஸ் தேனியில் தங்கியிருந்த அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், சவுக்கு சங்கர் குண்டாஸ் வழக்கிலும், கரூர் பணமோசடி வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது. மற்ற வழக்குகளுக்காக அவர் இன்னும் சிறையில் உள்ளார்.
வழக்கு
இதற்கிடையில், போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டி.எஸ்.பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் ரெட் ஃபிக்ஸ் தலைமை செய்தி ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் டெல்லி அருகே தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டை கடந்த மே மாதம் 10 ஆம் தேதி திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை திருச்சி அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஏற்கனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
வாதம்
இந்நிலையில், இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.வி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஃபெலிக்ஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், 100 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளதாகவும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, விசாரணையை ஜூலை 29 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது வருகிற ஜூலை 29 ஆம் தேதி தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil