விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஷேக் முகமது என்பவருக்கு சொந்தமான 56 வயதான லலிதா என்ற பெண் யானையின் பராமரிப்பு தொடர்பாக வனத்துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் யானை பாகனுடனே இருக்கட்டும். பாகனிடம் இருந்து யானையை அழைத்து செல்ல வேண்டாம். தொடர்ந்து பாகன் பராமரிப்பில் இருக்கட்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பாகன் கோயில் விழாவுக்கு யானையை அழைத்து சென்றபோது காயம் ஏற்பட்டது. முறையாக சிகிச்சை அளிக்கப் படவில்லை. இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன், யானையின் பராமரிப்பு குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.
இதுவே சரியான நேரம்
இந்நிலையில் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், "வன விலங்குகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. மதுரை கால்நடை மருத்துவர் கலைவாணன், யானை லலிதா பூரண குணமடையும் வரை சிகிச்சை அளிக்க வேண்டும். அவரது பரிந்துரைப்படி லலிதாவுக்கு தேவையான உணவு, மருந்து, தகுந்த மாற்று இருப்பிடம் வழங்க விருதுநகர் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வளர்ப்பதற்காக யானைகளை வாங்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் அரசு மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய இதுவே சரியான நேரம்.
பல கோவில்களில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் யானைகள் வைக்கப்பட்டு உள்ளன. அவை, 24 மணி நேரமும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன.
யானைகள் துன்புறுத்தல்
யானைகள் துன்புறுத்தப்படுகின்றன. குடிபோதையில் உள்ள பாகன்களால் யானைகள் துன்புறுத்தப்படுகின்றன. சித்ரவதை தாங்க முடியாமல், யானைகள் சில நேரங்களில் கோபமடைந்து வன்முறையில் ஈடுபடுகின்றன. அனைத்து கோயில்கள், தனியார் யானைகளை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் ஆய்வு செய்ய வேண்டும்.
தனி நபர்களோ அல்லது மத நிறுவனங்களோ யானைகளை இனி வாங்கக்கூடாது என்ற உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். கோயில்களில் வளர்க்க இனி யானைகள் வாங்க கூடாது என தமிழகத்தின் அனைத்து கோயில்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கூறி வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/