தமிழகம் முழுவதும் சாலைகள் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்களை அகற்றவது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் தமிழகத்தில் உள்ள சாலைகள், நடைபாதைகள், நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், அரசு அலுவலக வளாகங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களை அகற்றவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் 3,168 வழிபாட்டு தலங்கள் ஆக்கிரமித்து கட்டுப்பட்டுள்ளதாகவும், இது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழிபாட்டு தலங்களை ஒரு சிலர் சுய லாபத்திற்காக ஆக்கிரமித்து பயன்படுத்திவருவதாகவும் ஏற்கனவே உச்சநீதிமன்றம் இதுபோன்ற ஆக்கிரமிப்பு வழிபாட்டு தலங்களை அகற்ற உத்தரவிட்டும் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கான குழு ஒன்றை அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு குழு இதுவரை குழு அமைக்கவில்லை எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாரயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்கவும் வழக்கில் எதிர் மனுதரார்களாக வக்பு வாரியம் மற்றும் பேரயங்களின் அமைப்புகளையும் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் படிக்க : அயோத்தியில் குவியும் காவல்படை… தீர்ப்பு வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!