மூத்த குடிமக்கள் எப்படி நடத்தபடுகிறார்கள் என்பதை பொறுத்தே மக்கள் நல அரசு மதிப்பிடப்படுகிறது என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் மருத்துவ செலவை 4 வாரத்தில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் ஓய்வுபெற்ற ஊழியரான ஈரோட்டை சேர்ந்த சண்முகத்தின் குடலில் கட்டி இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்காக 2 லட்சத்து 74 ஆயிரத்து 147 ரூபாய் மருத்துவ கட்டணமாக செலுத்தினார். பொதுக் காப்பீட்டுப்திட்டத்தின்கீழ் தனது ஓய்வூதியத்திலிருந்து பங்களிப்பை வழங்கியிருந்ததால் மருத்துப செலவை திரும்ப தரக்கோரி கிராமப்புற மருத்துவ பணிகள் இயக்குனருக்கு விண்ணப்பித்தார். அதை பரிசீலித்த இயக்குனர், காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறி அவரது விண்ணபத்தை நிராகரித்தார்.
'பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது' - ஐகோர்ட்
இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 8 வாரங்களில் மருத்துவ செலவுகளை திரும்பி வழங்க நிதித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டும், அது அமல்படுத்தப்படவில்லை.
இதையடுத்து தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நிலையில் 57 ஆயிரத்து 860 ரூபாயை மட்டும் ஒதுக்கி அரசு உத்தரவு பிறப்பித்தது. 2 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் வழங்க கோரிய நிலையில் 57 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கியதை எதிர்த்து சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக மற்றொரு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சண்முகத்தின் மருத்துவ செலவை திரும்பி வழங்குவதற்கான கருத்துரு நிதித்துறை செயலாளரின் முன்பு நிலுவையில் இருப்பதால், அதன் தற்போதைய நிலைகுறித்து தெரிவிக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஊழியரான மனுதாரர் 2வது முறை நீதிமம்றத்தை நாடியுள்ள நிலையில், மீண்டும் அவரை நீதிமன்றத்திற்கு இழுக்க விரும்பவில்லை எனக்கூறி மீதமுள்ள 2 லட்சத்து 16 ஆயிரத்து 314 ரூபாயை 4 வாரத்தில் வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.
சென்னை பல்கலை - இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு
வயதான ஓய்வூதியதாரர்களுக்கு சேரவேண்டிய மருத்துவ சலுகைகளை வழங்காமலும், முறையாக நடத்தாமலும் இருப்பது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். அவசர நிலையில் திட்டத்தில் இணைக்கப்பட்ட மருத்துவமனைகளை தேடிக்கொண்டு இருக்க முடியாது என்றும், ஒவ்வொருவரும் வாழ்க்கையின் உயிரை காப்பாற்றவே முக்கியத்துவம் கொடுப்பார்கள் என குறிப்பிட்ட நீதிபதி, திட்டத்தில் சேர்க்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாக கூறி, மருத்துவ செலவை திரும்ப வழங்க மறுக்கக்கூடாது என அரசுக்கு அறிவுறுத்தினார்.
மூத்த குடிமக்கள் எப்படி நடத்தபடுகிறார்கள் என்பதை பொறுத்தே மக்கள் நல அரசு மதிப்பிடப்படுகிறது என குறிப்பிட்டுள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எதிர்காலத்தில் மருத்துவ செலவை திரும்ப தரக்கோரி வரும் விண்ணப்பங்களை அதிகாரிகள் மனிதாபிமானத்தோடு பரிசீலிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.