நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் ஈசன் புரொடக்சன்ஸ் என்கிற நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோரின் நடிப்பில் 'ஜகஜால கில்லாடி என்கிற படத்தைத் தயாரிக்க கடன் வழங்கக் கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்தை அணுகினர்.
பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடன் தொகையை திருப்பி கொடுக்கப்படவில்லை.
இதனை அடுத்து, இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர் நீதிபதி ரவீந்திரன், கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க ஏதுவாக, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி கடந்த 2024 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி உத்தரவிட்டார்.
உரிமைகளைப் பெற்று அவற்றை விற்று கடன் தொகையை ஈடு செய்யவும், மீதத்தொகையை ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் வழங்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கக் கோரிய போது, படம் முழுமையடையவில்லை எனக் கூறி பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், தற்போது வரை கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 543 ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். மேலும், இந்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட சார் பதிவாளருக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சிவாஜி வீட்டை ஜப்தி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனை தொடர்ந்து, கடன் பிரச்சனைக்கு தீர்வு காணும்படியும் ஜப்தி உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.