அண்ணா பல்கலைக்கழக சுற்றறிக்கைக்குத் தடை : பேராசிரியர்களிடமிருந்து வாங்கி வைத்திருக்கும் அனைத்து அசல் சான்றிதழ்களையும் அவர்களிடமே தனியார் பொறியியல் கல்லூரிகள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலைகழக சுற்றறிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக சுற்றறிக்கைக்குத் தடை
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளின் தலைவர்கள் மற்றும் முதல்வர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், தங்களுடைய அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் தர மறுப்பதாக ஏராளமான பேராசிரியர்களிடமிருந்து புகார்கள் வருவதால், கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து பெற்றுள்ள சான்றிதழ் சரிபார்த்தலுக்குப் பின்னர் அவர்களின் அனைத்து அசல் சான்றிதழ்களும் உடனடியாக திரும்ப கொடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த சுற்றறிக்கையை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பதிவாளருக்கு உத்தரவு
இந்த வழக்கு இன்று நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அசல் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைத்தால் கல்வியாண்டின் இடையில் ஆசிரியர்கள் வேறு கல்லூரிக்கு மாறிவிட்டால், மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் ஆய்வு மேற்கொள்ளும் போது அசல் சான்றிதழ்களை காட்ட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வலியுறுத்தபட்டது.

மேலும், பத்திரிகைகளில் வந்த அறிக்கைகளின்படி, நாட்டிலுள்ள 8 மாநிலங்களில் 50 ஆயிரம் ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவதாகவும், 9 ஆயிரத்து 60 போலி ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், சான்றிதழை பெற வேண்டுமென ஏ.ஐ.சி.டி.இ. அறுவுறுத்தும் நிலையில் அதற்கு முரணாக அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும், அவ்வாறு சுற்றறிக்கை அனுப்ப அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லை என வாதிட்டார்.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, மனு தொடர்பாக அண்ணா பல்கலைகழக பதிவாளர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் அதுவரை சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டார்.
