தமிழ்நாட்டின் தற்போது மின்துறை அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பலர் இடமிருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இதனால் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீதுள்ள வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் நிலுவையில் உள்ளன.
இதை தொடர்ந்து மத்திய அமலாக்கப்பிரிவு செந்தில்பாலாஜி மற்றும் அவர் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த 3 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் இந்த 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்குகள் மீது புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil